25 Nov 2021

கடவுள் தேசத்தின் சொத்துகள்

கடவுள் தேசத்தின் சொத்துகள்

            மக்கள் கோயில்களில் தங்கம், வெள்ளி, காசு என்று குவிப்பதைப் பார்க்கும் போது பல சமயங்களில் ஆச்சரியமாகவும் சில சமயங்களில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

            கேரளாவின் பத்மநாப சுவாமி கோயிலை நீங்கள் எடுத்தக் கொள்ளலாம். அதன் தங்க நகைகளை மதிப்பிட பல நாட்கள் தேவைப்பட்டன. அவை கோயிலின் பாரம்பரியமான சொத்துகள் என்று நீங்கள் வாதிடலாம். யாரும் கொடுக்காமல் கோயிலுக்கு அவை வந்திருக்க வாய்ப்பில்லை. திருப்பதி பெருமாளை உலகின் பணக்காரக் கடவுளாகத்தான் குறிப்பிடுகிறார்கள். வசூல் வேட்டையில் கடவுள்களின் சூப்பர் ஸ்டார் என்று அவரைத்தான் குறிப்பிடலாம்.

            கடவுள் மக்களுக்குக் குறைகளைத் தெரிந்து வைக்கிறாரோ, தெரியாமல் வைக்கிறாரோ? ஒவ்வொருவரும் தங்கள் குறைகளைச் சொல்லத்தான் கோயிலை நோக்கிப் படையெடுக்கிறார்கள். பிறகு தங்கள் குறைகளைப் போக்குவதற்குக் கடவுளோடு ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்கிறார்கள். அந்த உடன்படிக்கைப் பிசகாமல் தங்கமோ, வெள்ளியோ, பணமோ வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனைச் செலுத்தி விடுகிறார்கள்.

            நேர்த்திக்கடன் என்ற வார்த்தையில் இருக்கும் கடன் என்ற சொல்லை நீங்கள் கவனிக்கலாம். வங்கிகள் உள்ளிட்ட பெரும் பொருளாதார நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்கான வட்டியை வைத்தே தங்களை விருத்திச் செய்கின்றன. அப்படி கடவுளும் நேர்த்திக்கடன் மூலமாகத் தன்னுடைய கோயிலை விருத்தி செய்கிறார்.

            கடவுள்தான் மனிதர்களையெல்லாம் படைத்தார் என்றால் அவர் மனிதர்களைப் பாரபட்சமாகக் குறைகளோடு படைத்திருக்கக் கூடாது. கடவுள் படைப்பில் அப்படி சில விசயங்கள் இருக்கும் என்றால் அவற்றைக் கடவுள் படைப்பாகக் கொள்ளவே முடியாது.

            குறையில்லாத மனிதர்களை நீங்கள் பார்க்க முடியாது. மனிதர்களின் மனதைப் பொருத்து இந்தக் குறைகள் பல்வேறு விதமாக விஸ்வரூபம் எடுக்கக் கூடியவை. இந்தக் குறைகளை எல்லாம் கடவுளை மையமாக வைத்தே பெரும்பாலான மக்கள் போக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.

            கடவுள் அணிந்து இருக்கும் ஆபரணங்கள் எல்லாம் மக்களிடம் எது இல்லாமல் இருக்கிறதோ அந்தக் குறைகளின் வெளிப்பாடுகளால் விளைந்த வேண்டுதல்களால் உண்டானவை. இப்படி மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்து கடவுள் தனது கோயிலுக்கான சொத்துகளைப் பெருக்கிக் கொள்கிறார்.

            இப்படி எல்லா கடவுள்களாலும் செய்து விட முடியாது. ஒரே பெயருள்ள கடவுள் கோயில்களில் ஒரு கோயில் செழிப்போடும் மற்றொரு கோயில் செலவுக்கே வழியில்லாமல் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். இதிலும் மக்களுக்கு என்று உணர்வு ரீதியான விசயங்கள் இருக்கின்றன. அதைப் பூர்த்தி செய்வதாக நம்பப்படும் கடவுளுக்கே வருமானங்களும் பிரபலத் தன்மையும் கிடைக்கிறது.

            மக்களிடம் உள்ள அடிப்படையான குறைகள் குறித்த பலவீனத்தைத்தான் கடவுள் பயன்படுத்துகிறார். மக்கள் மனதில் குறைகள் எதுவும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் கடவுளின் அருள் பரிபாலனைகள் மிகவும் சிக்கலாகி விடும். ஆனால் மனித மனம் குறைகளை எண்ணி எண்ணி குமையும் வகையில் இருப்பதால் கடவுளர்களின் தேசங்களின் உண்டியல்கள் எப்போதும் நிரம்பிய வண்ணமாக உள்ளன.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...