21 Nov 2021

நேர்மை பிழைத்தோருக்கு நீர்மை கூற்றாகும்

நேர்மை பிழைத்தோருக்கு நீர்மை கூற்றாகும்

            மழைக் காலங்களில் வரும் வெள்ளங்களுக்கு யாரைப் பொறுப்பேற்க சொல்வது என்றால் நான் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களைத்தான் பொறுப்பேற்க சொல்வேன். கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை கிராமங்களில் வெள்ளம் வருவது அரிது. கிராமங்கள் அதற்குரிய கட்டமைப்புடன் இருந்தன.

கிராமங்களில் வெள்ளம் வருவதற்குள் குட்டைகள், குளங்கள் நிரம்பியாக வேண்டும். ஒவ்வொரு குட்டையோ குளமோ நிரம்பும் போது பெரியவர்கள் சொல்வார்கள் எந்தக் குட்டை நிரம்பினால் எவ்வளவு தண்ணீர் ஏறும் என்றும் எந்தக் குளம் நிரம்பினால் எவ்வளவு தண்ணீர் ஊருக்குள் வரும் என்று. அது குறித்த கதைகளும் அவர்களிடம் உண்டு. அனைத்துக் குளங்களும் நிரம்பினால் ஊரின் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பது குறித்த தெளிவான முடிவு வரை அவர்களுக்கு உண்டு.

நகரங்களும் ஏறக்குறைய இப்படிப்பட்ட கட்டமைப்புடன்தான் இருந்தன. ஆனால் முதலில் சீர்குழைவைச் சந்தித்தவை நகரங்கள்தான். நீங்கள் கிராமங்களில் சுதந்திரமாக வீட்டைக் கட்டி முடித்து விடுவதைப் போல நகரங்களில் கட்டி விட முடியாது. பல்வேறு நகர்ப்புற நிர்வாக அமைப்புகளிடமிருந்து வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெற வேண்டும். நகர்ப்புறங்களில் ஒவ்வொன்றைக் கட்டமைக்கவும் உங்களுக்கு அனுமதி தேவை. அனுமதியின்றி கட்டப்படுபவைகளை நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் அனுமதிப்பதில்லை.

நகர்ப்புறங்களில் உரிய அனுமதியின்றி எதையும் கட்ட முடியாது எனும் போது வெள்ளம் எப்படி வரும்? ஆக இதற்கு அந்தந்த நிர்வாக அமைப்புகள்தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். உரிய அனுமதிகளோடுதான் வெள்ளம் வருகிறது என்பதையும் அந்த அமைப்புகள் ஏற்க வேண்டும். இவற்றையெல்லாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நிர்வாக நடைமுறைகளுக்கு இருக்கிறது.

கிராமங்களும் சமீப காலத்தல் நகர்ப்புறங்களுக்கு ஈடான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குளமாய்க் காணாமல் போய் கொண்டிருக்கிறது. கிணறுகள் குப்பைத் தொட்டிகளாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆறுகள் சாக்கடைக் கால்வாய்களாய் உருமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் அளவுக்கு அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கின்றன. வாய்க்கால்கள் மரண தறுவாயில் கிடக்கின்றன.

செல்லும் பாதையில் இருக்கும் இடையூறுகளை அகற்றி விட்டால் பயணங்கள் எளிதாக நிகழப் போகின்றன என்ற கூற்றை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். தண்ணீர் ஓடுவதற்கான பாதைகள் இருந்தால் தண்ணீர் தேங்கப் போவதில்லை. தண்ணீர் வடிவதற்கான மார்க்கங்கள் அடைபடுவதற்கு நிர்வாக அமைப்புகள் ஏதோ ஒரு வகையில் உறுதுணையாக இருக்கின்றன. அந்த உறுதுணைகளில் புரளும் லஞ்ச லாவண்யங்களே மழைக் காலங்களில் நம்மை வெள்ளமாய்த் திரண்டு வந்து அச்சுறுத்துகிறது. நேர்மை பிழைத்தோருக்கு நீர்மை கூற்றாவதும் நீர் நிலையைக் காத்தாரை உயர்ந்தோர் ஏத்தலும் அவரவர் முன் வினை அவரவரைச் சுடும் என்பதும் நியதிகள். நியதிகளை மாற்ற முடியாது என்பதால் அவற்றை மீறக் கூடாது.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...