20 Nov 2021

நீங்களும் உங்கள் நிதிக் கொள்கைகளும்

நீங்களும் உங்கள் நிதிக் கொள்கைகளும்

            கொரோனா வந்ததுதான் வந்தது. அது பல்வேறு புதிய சொற்களை புழக்கத்தில் விட்டிருக்கிறது. அந்தப் புதிய சொற்களில் ஒன்று அவசர கால நிதி என்பது. அது என்ன அவசர கால நிதி என்றால் பெயரில் இருப்பது போல அவசர காலத்தில் பயன்படும் நிதி. அதாவது காரணப் பெயர்.

            இந்திய வாழ்க்கையில் யார் அவசரமில்லாத நிலையில் நிதானமாக இருக்கிறார்கள்? எல்லா காலமும் இங்கு அவசர காலம்தான். இந்திய டிராபிக்கில் நுழைந்து பார்த்தால் தெரியும் அவசர காலம் எப்படி இந்தியர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்று.

            தவணைத் தொகை, வாடகைத் தொகை, மாதக் கட்டணங்களுக்கான தொகை என்று இந்தியர்கள் அல்லாடுவதைப் பார்க்கும் போது அவர்களுக்கு எல்லா காலமும் அவசர காலம்தான். 

            இந்தியர்கள் எல்லா காலங்களிலும் அவசர காலங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் நிதானமாக வாழ்ந்த காலம் என்றால் அது கொரோனா காலம்தான். ஊரடங்கு அவர்களின் அவசரங்களை முடக்கிப் போட்டு விட்டது என்று சொல்லலாம். அந்தக் காலத்திலும் இந்த நிதி நிபுணர்கள் அவசர கால நிதி என்ற சொல்லைக் கிளப்பி விட்டு பதற்றத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள்.

            நிதி நிபுணர்கள் பேசியதை நீங்கள் கேட்டால் இந்தியர்களுக்கு அவசர கால நிதி பற்றிய எந்த அறிவும் கிடையாது என்பது போலத்தான் இருந்தது. அவசர கால நிதி குறித்த உள்ளுணர்வு இந்தியர்களுக்கு மிக அதிகமாகவே உண்டு. அதுவும் இந்திய ஆண்களை விட இந்திய பெண்களுக்கு அது அதிகம். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அரிசிப் பாத்திரம், சீரக டப்பா என்று நீங்கள் எதை முழுமையாக அகழ்வாய்வு செய்தாலும் அதிலிருந்து நூறு ரூபாய்க்குக் குறையாமல் பணத்தை எடுக்க முடியும்.

            பொருளாதார விசயங்களில் பெண்கள் ஆண்களை அதிகம் நம்ப மாட்டார்கள். ஆண்கள் அதில் அசட்டை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு நெருக்கடியான நேரம் என்றாலும் அவர்களிடம் பணம் இருக்கும். சீட்டுப்பணம், குண்டுமணித் தங்கம் என்று ஆண்களுக்குத் தெரியாமல் நிலைமையைச் சமாளிக்க அவர்கள் எதாவது செய்து வைத்திருப்பார்கள்.

            கையில் வரும் பணத்தை முழுமையாகச் செலவழித்து விடாமல் கொஞ்சம் எடுத்து வைப்பது இந்தியப் பெண்களின் இரத்தத்தில் கலந்த குணம். பணம் என்றில்லை சமையலறைப் பொருட்கள் வரை அவர்கள் அப்படித்தான். எந்தப் பொருளையும் முழுமையாகப் போட்டு அப்படியே சமைத்துக் காலி செய்து விட மாட்டார்கள். நாளைக்கு நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நினைப்பில் கொஞ்சமாவது எடுத்து வைப்பார்கள். பணம், பொருள் என்று எதுவாக இருந்தாலும் முதலில் குறிப்பிட்ட அளவை எடுத்து வைத்து விட்டு எஞ்சியதில்தான் செலவழிக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.

            உலகமே திவால் ஆனாலும் இந்தியா திவால் ஆகாது என்பது என் உறுதியா நம்பிக்கை. அதற்கு இந்தியப் பெண்களின் குணம் காவலாக இருக்கும். அவசர கால நிதி என்பதெல்லாம் மேற்கத்திய சொல்லாடல்கள். இந்தச் சொல்லாடல்கள் அவர்களுக்குத் தேவையானது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறை அப்படியானது. விட்டேத்தியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அது போன்ற சொல்லாடல்கள் அவசியமானதும் கூட.

            இந்திய வாழ்க்கை அப்படிப்பட்ட விட்டேத்தியான மேற்கத்திய தன்மை கொண்டது இல்லை. கொஞ்சம் பணம் சேர்ந்தாலும் அது நகையாகவோ, ஒரு பித்தளைப் பாத்திரமாகவோ மாறும் பாரம்பரியம் இங்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் சொத்து, சேமிப்பு என்றுதான் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துவார்களே தவிர வேறு மார்க்கங்களுக்குச் செல்ல மாட்டார்கள்.

            எவ்வளவோ கொடிய பஞ்சங்களை, கொள்ளை நோய்களை, அந்நிய படையெடுப்புகளை இந்தியா சந்தித்திருக்கிறது. அது போன்ற நிலைமைகளை இவ்வளவு பெரிய மக்கள் தொகையோடு மேற்கத்திய நாடுகள் சந்தித்திருந்தால் சுருண்டு போயிருக்கும். இந்தியா எல்லாவற்றிலும் மீண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு அவசர கால நிதியைப் பற்றி மட்டுமல்ல நெருக்கடி கால வாழ்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் தெரியும்.

            இங்கு நகைப் பரிமாற்றம் இல்லாத திருமணங்களை நீங்கள் பார்க்க முடியுமா? அது தவறு என்று வாதிட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் இந்தியர்களுக்குத் தெரியும் அதெல்லாம் அவசர கால நிதி என்பது. மேற்கத்திய அவசர கால நிதி குறித்த கோட்பாடுகளை நிதி நிபுணர்கள் அவர்களுடனேயே வைத்துக் கொள்வதுதான் நல்லது.

*****

1 comment:

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...