இந்திய வாழ்வின் சாராம்சம்
45 வயதில் ஓய்வு பெறுவது என்றால் எப்படி?அதற்கு 25 வயதிற்குள்
திருமணம் செய்திருக்க வேண்டும். 26 வயதில் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். 45 வயது
ஆகும் போது குழந்தைகள் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
என்னைச் சந்திப்பவர்களில் நிறைய பேர் இந்த 45 வயதில் ஓய்வு பெறுவதைப்
பற்றி அதிகம் பேசுகிறார். இதை FIRE என்று வேறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது
Finance Independence and Retire Early என்பதன் Acronym அதாவது முதலெழுத்துகளின் சுருக்கம்
என்கிறார்கள். நல்ல சுருக்கம் போங்கள். ஃபயர் என்று பெயரிலே தீப்பற்றுவது போல இருக்கிறது.
இந்திய வாழ்வில் இது சாத்தியமாவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.
30 வயதுக்கு மேல்தான் இங்கு பலருக்குத் திருமணமே நடக்கிறது. 35 வயதில் 40 வயதில் திருமணம்
செய்து கொண்டவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள். அதற்குப் பின்பு குழந்தை பிறக்க
வேண்டும்.
குழந்தை பிறப்பெல்லாம் முன்பு
போலவா இருக்கிறது? இந்த வருடம் கல்யாணம், அடுத்த வருடம் குழந்தை என்று உடனடியாக நிகழ்ந்து
விடுவதில்லை. கல்யாணம் ஆனதிருந்து ஐந்தாறு வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பது தற்போது
அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. பத்து வருடங்கள் கடந்து பிறக்கும் குழந்தைகளும் பிறக்கின்றன.
இந்திய வாழ்க்கையில் எல்லாமே தாமதமாவதால் குழந்தை பிறப்பும் தாமதமாகி விடுகிறது.
நிலைமை இப்படி இருக்க 45
வயது ஆகும் போது குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருப்பார்கள். கல்வி சார்ந்த
செலவுகளுக்கு அதிகம் செலவிட வேண்டிய காலகட்டம் அது. இதற்கிடையில் வீட்டுக்கடன், தனிநபர்
கடன் என்று பல்வேறு கடன்கள் வேறு கூடி கும்மிக் கொண்டிருக்கும். இந்தக் கடன்களை அடைப்பதற்கான
தனி ஓட்டம் தனி பாதையில் போய்க் கொண்டிருக்கும்.
50 – 55 வயதுகளில் ஓய்வைப்
பற்றிச் சிந்திக்கலாம் என்றால் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய
காலகட்டமாக அது இருக்கும். அதற்குள் வயது 58 ஐக் கடந்தால் அதுவும் அரசாங்கப் பணியில்
இருந்தால் அரசாங்கமே ஓய்வைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடும். அரசாங்கம் அல்லாத
பணி என்றால் சாகும் வரை இந்திய வாழ்வில் ஓய்வே கிடையாது. சாவு ஒன்றுதான் ஓய்வு. பொருளாதாரத்
தேவைகள் அவ்வபோது பிடுங்கி எடுத்துக் கொண்டு இருப்பதில் இறுதி வரை ஓடி மரணம் வந்து
ஓய்ந்தால்தான் உண்டு.
அது சரி! 45 வயதுக்குள் ஓய்வு
பெற்று பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சாவதில் என்ன இருக்கிறது? பிக்கல் பிடுங்கலோடு சாவதில்தான்
இந்திய வாழ்வின் சாராம்சமே அடங்கி இருக்கிறது. ஆக இந்திய வாழ்வில் ஓய்வு என்பதே கிடையாது.
ஓய்வு என்ற எதிர்மறையான சொல்லும் இந்திய வாழ்வில் நுழைந்து விட முடியாது. அதை வீடுபேறு
என்ற சொல்லால் இந்திய வாழ்வு குறிக்கும் விதமே தனி.
*****
No comments:
Post a Comment