18 Nov 2021

வாகனம் இருந்தாலும் பேருந்தில் செல்!

வாகனம் இருந்தாலும் பேருந்தில் செல்!

            வாகனங்கள் வைத்திருப்பதன் நோக்கம் விரைவாகச் சென்று வருவதும் அதன் மூலமாக நேரத்தை மிச்சப்படுத்துவதும்தானே. எங்கள் வீட்டில் மூன்று இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. மொத்த குடும்பமும் செல்ல இந்த மூன்று வாகனங்கள் போதும்.

            வெளியூர் பயணங்கள் திட்டமிடப்படும் போது அது குறித்த இறுதி முடிவு என் அப்பாவிடம் பெறப்படும். அவர் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்து விட்டு சோதிடப் பலன்கள் சொல்வதைப் போல வண்டியில் போய் வா, பேருந்தில் போய் வா என்று எதையாவது சொல்லி வைப்பார். அதுதான் முடிவு.

            சமீபத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார்கோயில் வரை நானும் என் மனைவியும் சென்று வர வேண்டியிருந்தது. எங்கள் ஊரிலிருந்து கொரடாச்சேரி, குடவாசல் என்று இரு சக்கர வாகனத்தில் போனால் ஒன்றரை மணி நேரத்தில் நாச்சியார்கோயிலில் இருக்கலாம். இரு சக்கர வாகனத்தில் சென்று விடுவோம் என்ற முடிவோடு பயணத்திட்டம் அப்பாவின் முடிவுக்குச் சென்றது.

            ஒரு நிமிடத்திற்கு ஐந்து நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர் பேருந்தில் போய் வாருங்கள் என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. போவதற்கு ஒன்றரை மணி நேரம், வருவதற்கு ஒன்றரை மணி நேரம், நாச்சியார்கோயிலில் அரை மணி நேரம் என்று மூன்றரை மணி நேரத்தில் முடிய வேண்டிய பயணத்திட்டம் பேருந்தில் என்றால் ஒரு நாளை விழுங்கி விடும். 

            நான் அப்பாவிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். பேருந்தில் சென்றால் அநாவசிய கால விரயத்தோடு இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்வதற்கு ஆகும் செலவை விட பேருந்துக் கட்டணம் கூடுதல் ஆகும் என்பது வரை எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன்.

            அப்பா முடிவிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லை. பேருந்தில்தான் சென்று வர வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். பிறகு என்ன செய்வது? நானும் என் மனைவியும் காலையில் ஏழரைக்கேக் கிளம்பி பேருந்திற்காகக் காத்து நின்றோம். பேருந்து எட்டு மணி வாக்கில் சாவகாசமாக வந்தது. அதில் ஏறி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி புதிய பேருந்து நிலையத்திற்கு மற்றொரு பேருந்தில் ஏறினோம்.

            திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் பேருந்தைப் பிடித்தோம். அது என்னவோ திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள்தான் அவ்வளவு மெதுவாகச் செல்கின்றனவோ? திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருக்கும் அதிகபட்சமான வளைவுகள் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நாங்கள் நாச்சியார்கோயிலில் இறங்கிய போது பேருந்து ஒன்றே கால் மணி நேர பயண நேரத்தை முழுங்கியிருந்தது.

            நாச்சியார்கோயிலில் விசாரிப்புகளை முடித்து விட்டு அரை மணி நேரத்தில் திட்டமிட்டபடி ஊர் திரும்ப திருவாரூர் நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறினோம். எங்கள் நேரம் பாருங்கள் குடவாசலைத் தொடர்ந்து எண்கண் வழியாகச் சுற்றிச் செல்லும் பேருந்தில் ஏறி விட்டோம். அது ஒன்றரை மணி நேரத்தை எடுத்துக் கொண்டு திருவாரூரை அடைந்தது. இடையில் ஆங்காங்கே பெய்த மழையில் சொட்டுச் சொட்டாக அழுக்கு நீரை எங்கள் மேல் இறக்கியபடி இருந்தது. உள்ளே வழியில் நீர் அழுக்கு நீராக வழியும் அளவுக்குப் பேருந்து தூசியும் தும்பட்டையுமாகவே பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன. மழை பெய்யும் போது இந்த அரசுப் பேருந்தில் மட்டும் ஏன் உள்ளேயும் மழை பொழிகிறது என்பதும் புரியாத புதிர்.

            ஒரு வழியாகத் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் வந்து எங்களூர் பேருந்திற்காகக் காத்துக் கிடந்து மாலை நான்கரை மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தோம். காலையில் நாங்கள் கிளம்பிய நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் கிளம்பியிருந்தால் நண்பகலுக்குள் பனிரெண்டு மணிக்குள் வீடு திரும்பியிருக்கலாம். நூறு ரூபாய் பெட்ரோல் போட்டதோடு விசயமும் முடிந்திருக்கும். பேருந்தில் ஏறிச் சென்றதில் எங்கள் இருவருக்கும் சேர்ந்து பேருந்து கட்டணம் இரண்டரை மடங்கு அதாவது ரூ. 240/- ஆகியிருந்தது. நேரமும் விரயம், காசுக்கும் தண்டம் என்ற வகையில் அந்தப் பயணம் முடிந்திருந்தது.

            அப்பாவுக்கு நல்லபடியாகப் பேருந்தில் போய் வந்ததில் சந்தோஷம். ஆங்காங்கே பேருந்துக்காகக் காத்துக் கிடந்து ஊர் வந்து சேர்ந்ததில் எங்கள் இருவருக்கும் இந்தப் பயணத்தில் கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் பேருந்துப் பயணத்தில் கிடைக்கும் அலாதியான அனுபவங்களும் பேசுவதற்குக் கிடைக்கும் நேரங்களும் வேறொரு பயண அனுபவத்தைக் கொடுக்கின்றன. மேலும் பேருந்து பயணத்தில் விரைவு என்ற பேச்சிற்கே இடமில்லை. அதுவும் அரசுப் பேருந்து என்றால் சொல்லவே வேண்டாம். பேருந்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பிறிதொரு பத்தியில் எழுதுகிறேன்.

*****

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...