8 Nov 2021

அவற்றை அப்படியே விட்டு விடலாம்

அவற்றை அப்படியே விட்டு விடலாம்

            ஒரு சில விசயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி எதுவும் யோசிக்க வேண்டியதில்லை. யோசித்து எந்தத் தீர்வும் கிட்டப் போவதில்லை. அது போன்ற விசயங்களில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லையே என்ற சஞ்சலம் மனதை ஆட்டிப் படைக்கலாம். ஆனால் தீர்வு தானாக ஒரு நாள் கண் முன் வந்து நிற்கும். அதற்காக மெனக்கெட வேண்டிய அவசியமே இருக்காது. மெனக்கெட்டாலும் உங்களால் ஒரு தீர்வைக் கண்டடைய முடியாது.

            ஏன் இப்படி சில விசயங்கள் இருக்கின்றன என்று கேட்க முடியாது. அது போன்ற விசயங்களுக்கு இருக்கக் கூடாது என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் வழிகாட்டினாலும் உதவினாலும் தவறாகப் புரிந்து கொள்ள கூடிய விசயங்கள் அவை. வழிகாட்டல் மற்றம் உதவியின் அருமையும் புரிந்துக் கொள்ளப்படாமல் போகலாம். அது எப்படி ஒரு புரிதலற்ற பரிதாபகர நிலையில் இருக்கிறதோ அதை அப்படியே இருப்பதோடு உங்களையும் அந்த நிலையை நோக்கி இழுத்து விடலாம்.

            ஆனால் நாம் அப்படித்தான் நினைக்கிறோம். எளிமைப்படுத்துகிறோம், துணை நிற்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் ஓரளவு சுறுசுறுப்பான நிலைமை மென்மேலும் சோம்பேறித்தனமான நிலைமையாக ஆவதுதான் மிச்சம். கடினங்களை எளிமையாக்கினால் பணித்திறன் அதிகரிக்கும் என்றும் நினைக்கலாம். ஆனால் மென்மேலும் வேலைத்திறன் குறைந்து போவதும் நடக்கலாம். நல்லது நிகழ்த்துகிறோம் என்று ஆரம்பித்து இறுதியில் கெடுதலை நிகழ்த்துவதாகவும் அது அமைந்து விடலாம்.

            ஒருவர் மனதளவில் தீர்மானித்து விட்ட விசயத்துக்குப் பிறரால் எந்த விதமான நிவர்த்தியையும் வழங்கி விட இயலாது. இது போன்ற நிலைகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு சில விசயங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவை ஒருவரின் மனநிலையில் உறுதியாகத் தீர்மானமான விசயங்களாக இருக்கலாம். உங்கள் விளக்கமும் எதிரிலிருப்பவரின் மனநிலையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கலாம். அது போன்ற நிலைகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம். கண்டு கொண்டு எதுவும் ஆவதற்குரிய விசயங்கள் அவை கிடையாது.

            நிரம்பி வழிகின்ற பாத்திரத்தில் நீங்கள் மேற்கொண்டு ஊற்றுவது போல்தான். நாம் ஊற்றியது பாத்திரத்தில் ஒரு துளி கூட சேரவில்லை என்று வருத்தப்பட முடியாது. மனிதப் பாத்திரங்கள் அதிலும் வித்தியாசமானவை. நாம் கொடுப்பதை வாங்கி தமக்குள் நிரப்பிக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. மனநிலையைப் பொருத்து மனிதப் பாத்திரங்கள் நிரம்புவதையோ, நிரம்பாமல் இருப்பதையோ விரும்புகின்றன. அதற்காக நம் அக்கறையைக் குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நம் அக்கறையைத் திணிக்காமல் இருப்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு ஒதுங்கிப் போவதில் பிழையேதும் இல்லை.

            நான் எந்த விசயங்கள் அவை என்று குறிப்பிட்டுக் கூறாத காரணத்தால் இதை இஷ்டப்போக்கிற்கு நீங்கள் தவறாக அர்த்தப்படுத்தலாம். அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு விளக்குவதற்கு இந்தப் பத்தியின் தலைப்பிற்கு ஏற்றாற் போல் நீங்கள் அவற்றை அப்படியே விட்டு விடலாம். உண்மை என்ன என்பது உங்களின் ஆழ்ந்த தன்மைக்குத் தெரிந்து இருக்கிறது. அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டியதுதான். அதை வியாக்யானம் செய்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...