16 Nov 2021

பொருளாதாரப் போலிகள்

பொருளாதாரப் போலிகள்

            இந்தியர்களின் ஒட்டு மொத்த வாழ்வும் பொருளாதாரத்தைக் குறியாகக் கொண்டு நகரக் கூடியது. அதை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாது ஒரு வறட்டு வேதாந்தத்தை எப்போதும் பூசிக் கொள்வதில் இந்தியர்களுக்குத் தனித்த மகிழ்ச்சி. சான்றாக இன்றைக்கு இருக்கிற நாம் நாளைக்கு இருப்பது நிச்சயமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வார்கள். நாளைக்கு இல்லாமல் போகும் நீங்கள் இன்றைக்குக் கொஞ்சமேனும் கொஞ்சம் தர்மம் செய்யுங்களேன் என்றால் பின்வாங்கி விடுவார்கள்.

            இந்தியர்களின் புறவயமாக வெளியில் தெரியாத அதே நேரத்தல் அகவயமான பொருளாதார இச்சையைக் காட்டும் பல பழமொழிகளைச் சொல்லலாம்.

            1. அண்ணன் தம்பி என்றாலும் வாயும் வயிறும் வேறுதான்.

            2. பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்.

            3. பணம் பத்தும் செய்யும்.

என்பன போன்ற பழமொழிகளை அதற்குச் சான்றாகச் சொல்லலாம். பணம் என்னும் பொருளாதார இச்சை குடும்பங்களைப் பிரிக்கும் என்பதையும் மனிதன் பிணமானாலும் அவனுடைய பொருளாதா ஆசை பிணமாவதில்லை என்பதையும் பணத்தைக் கொண்டு தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்ய மனிதர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை மேற்கண்ட பழமொழிகள் உங்களுக்கு எடுத்துக் காட்டும்.

            இந்தியர்கள் பொருளாதாரத்தின் மீதான தங்கள் உட்கிடக்கையை அவ்வளவு எளிதாகக் காட்டி விட மாட்டார்கள். மெல்லிய ஆன்மீகத்தால் மூடி மறைப்பார்கள். இது குறித்து நீங்கள் எவ்வளவு கேட்டாலும்,

            1. எல்லாம் அவன் செயல்.

            2. உடம்பெல்லாம் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு தெருவில் உருண்டாலும் ஒட்டுகின்ற மண்தான் ஒட்டும்

என்பன போன்ற மலுப்பல்களைத் தாராளமாக அள்ளி வீசுவார்கள். இப்படியெல்லாம் கூறினாலும் தர்மம் என்ற பெயரில் பைசா காசை அவர்களிடம் வாங்கி விட முடியாது. அதற்கு ஆயிரத்தெட்டு கணக்குப் பார்ப்பார்கள். உங்கள் ஆன்மீகமும் வேதாந்தமும் தர்மம் செய்வதை ஆதரிக்கிறதே என்றால் ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற சொலவத்தைச் சொல்வதற்குத் தயாராக வைத்திருப்பார்கள்.

            பொருளாதாரத்தைச் சுற்றிச் சுழலும் அவர்களின்  சுயநலத்துக்கு ஏற்ப வேதாந்தம், இன்ன பிற ஆன்மீகம் மற்றும் சொலவங்களை ரொம்ப சமத்காரமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல் அவர்கள் செய்யும் பொருளாதாரத் தவறுகளையும் ஆன்மீகத்தின் மூலமாகவும், வேதாந்தத்தின் மூலமாகவும், பழமொழிகள் மூலமாகவும் நியாயம் செய்து கொள்வார்கள்.

            இந்தியர்கள் பொருளாதாரத்தின் மீது நாட்டம் இல்லாதவர்கள் போல் ஒரு தோற்றத்தைக் காட்டுவது போலித்தனமானதாகும். இங்கு பொருளாசையைத் துறந்து விட்டதாகச் சொல்லக் கூடிய ஒரு பிச்சைக்காரத் துறவி பிச்சையெடுத்தே கோடிக் கணக்கில் சம்பாதிக்க முடியும். மண்ணாசை, பெண்ணாசை  உட்பட ஆசைகளைத் துறந்து விட்டதாகச் சொல்லக் கூடிய சாமியார்கள் ஏக்கர் கணக்கில் ஆசிரமங்களைக் கட்ட முடிவதுடன் பாலியல் புகார்களிலும் சிக்குவதைச் சர்வ சாதாரணமாகக் காண முடியும். இதற்குப் பின்னால் இருப்பதெல்லாம் ஆன்மீகத்தைக் கலந்து உட்டாலக்கடி காட்டும் அவர்களின் பொருளாதாரத்தின் மீது நாட்டம் இல்லாதது போன்ற போலித்தனமான பொருளாதாரக் கண்ணோட்டம்தான்.

*****

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...