கூட்டுக் குடும்பத்தைக் கொன்றவர்கள்
வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றும் டிரெண்ட் ஆகிறது.
பெற்ற குழந்தையை அடித்த தாயின் காணொளி அப்படி டிரெண்ட் ஆனது. ஒரு தாய் தன் குழந்தையை
அப்படி அடிப்பாள் என்பதைப் பார்ப்பவர்களால் நம்ப முடியாது. அந்தக் காணொளியை மனமுள்ள
யாராலும் காணவும் முடியாது. ஆனால் அந்தக் காணொளி எப்படி இவ்வளவு பகிரப்படுகிறது என்று
யோசித்தால் அதற்குப் பின்னும் ஓர் உளவியல் ஒளிந்திருக்கிறது. இந்தப் பெண்ணுக்குத் தண்டனை
கிடைக்கும் வரை இந்தக் காணொளியைப் பகிருங்கள் என்ற துணைக்குறிப்போடு அந்தக் காணொளியைப்
பகிர்கிறார்கள்.
அடிப்படையில் மக்களுக்கு ஒரு மனோபாவம் மாறவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு
நியாயம் கிடைக்க வேண்டும், தண்டித்தவர்களுக்குத் தண்டனை கிடைகக் வேண்டும் என்பதாக அது
இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் நியாயம் பெற்றுத் தருவது? அது ஒரு மிகப்
பெரிய கேள்விக்குறி. அந்தப் பணியை யார் பொறுப்பெடுத்தக் கொண்டு செய்வது? அது விடை காண
முடியாத கேள்வி. பொதுவாக மக்கள் பகிர்வதோடும் தங்கள் ஆதங்கத்தைக் காட்டுவதோடும் தங்கள்
சமூக பொறுப்பு முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
ஒரு தாய் குழந்தையைக் கண்மூடித் தனமாக அடிக்கும் போது அத்தாயைத்
தடுக் வழியில்லாத அளவுக்கு தனிமைகளும் மன இறுக்கங்களும் சூழ்ந்ததாக நமது சமூக அமைப்பு
மாறிக் கொண்டு இருப்பதை நாம் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.
ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பில் இப்படி ஒரு குழந்தையை அடித்து
விட முடியாது. சித்தப்பனோ சித்தியோ பெரியப்பனோ பெரியம்மாவோ அத்தையோ மாமாவோ தாத்தாவோ
பாட்டியோ வந்து தடுப்பதோடு குழந்தையை அடித்தவர் வாங்கும் ஏச்சும் பேச்சும் இருக்கிறதே
பார்க்கவே பரிதாபமாக இருக்கும். கூட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் அவ்வளவு செல்லமாக
வளர்வதைப் பார்க்க வேண்டுமே. குழந்தைகளைக் கொண்டாடுவது என்றால் அதுதான். ஆனால் என்ன
செய்வது? நாம்தான் கூட்டுக் குடும்பத்தைக் கொன்றவர்களாயிற்றே.
*****
No comments:
Post a Comment