14 Nov 2021

மரணத்தின் வாழ்வுதனை மரிக்க வைக்க முடியுமோ?

மரணத்தின் வாழ்வுதனை மரிக்க வைக்க முடியுமோ?

            கொரோனா காலத்து மரணங்கள் என்னை நிரம்பவே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஒரு சேரத் தள்ளியது. ஆரோக்கியமானவர்கள் இறந்து போனார்கள். பலவீனமாக இருந்தவர்கள் பிழைத்து வந்தார்கள். இளைஞர்களும் இறந்துப் போவார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. இன்று வரை பல கொரோனா மரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருபது நாட்கள் வரை மருத்துவ மனையில் இருந்தோர் பிழைத்து வந்தனர். இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தோர் இறந்து போயினர். இது எப்படி நடந்தது என்பது எனக்கு இன்று வரை விடை தேடும் வினாவாகவே இருக்கிறது.

            இன்னொரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. கொரோனாவில் தன் கணவரைப் பறிகொடுத்திருந்தாள் அந்தப் பெண். அவள் தன்னுடைய கணவருக்குக் கொரோனா இல்லை என்று வாதிட்டாள். இறந்துப் போய் விட்ட அவளுடைய கணவரைப் பார்க்க கூடாது என்பதற்காகத்தான் அவளுடைய கணவருக்குக் கொரோனா என்று சொல்வதாக அழுது புலம்பினாள்.

            எங்கள் ஊரில் இருந்த இன்னொரு அக்கா செய்த காரியத்தையும் குறிப்பிட வேண்டும். அந்த அக்காவும் கொரானா என்ற ஒன்றே கிடையாது என்றார். அப்படிச் சொன்னதோடு அல்லாமல் தனது மகளின் கல்யாணத்தையும் பிரமாண்டமாக நடத்தினார். இவ்வளவு கூட்டம் கூடுகிறதே என்ற பயம் ஊரில் இருந்த எல்லாருக்கும் இருந்தது. இந்தக் கூட்டத்தால் கொரோனா பரவும் என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் எவ்வித கொரோனா அறிகுறியும் யாருக்கும் ஏற்படவில்லை.

            அந்த நேரத்தில் எங்கள் கிராமத்துக் கிழவி ஒருவர் இயற்கையாக மரணமடைந்தார். அந்தச் சாவிற்கு அளவான கூட்டம்தான் கூடியது. ஆனால் அந்தச் சாவிற்கு வந்துப் போன நான்கு பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

            இப்படி விதவிதமான அனுபவங்களைக் கொரோனா காட்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து பலவித மரணங்களைக் கண் முன்னாலும் தொலைக்காட்சியிலும் பார்க்க நேர்ந்தது. அண்மையில் கன்னட சூப்பர் நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்தைக் கேள்விபட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. நாற்பதைக் கடந்த வயதில் அவர் மாரடைப்பால் இறந்திருந்தார். நாற்பதைக் கடக்கும் வயது என்பது மாரடைப்பால் மரணமடைவதற்கான வயதே அல்ல. அதிலும் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து உடலை முறையாகப் பேணக் கூடியவர். திரையுலக நண்பர்களோடு நட்பாக மட்டும் பழகக் கூடியவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு உடலியல் ரீதியகாவோ, மனவியல் ரீதியாகவோ மாரடைப்பு வரவே வாய்ப்பு இல்லை எனலாம்.

            பல நேரங்களில் மரணங்கள் புரிந்து கொள்ள முடியாத புதிராக அமைந்து விடுகின்றன. மரணத்தைத் தடுக்க மனிதர்கள் எவ்வளவோ முன்னேற்பாடுகளைச் செய்து வைக்கின்றனர். மரணம் எத்தகைய முன்னேற்பாட்டோடு வருகிறது என்பதை யாரும் கண்டறிந்து விட முடிவதில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் போது மரணத்தின் வாழ்வுதனை எதுவும் கவ்வ முடியாது என்பது புரிகிறது. மரணத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வாழ்வைக் கவ்வும் உரிமை இருக்கிறது என்பதும் புரிகிறது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...