கொரோனாவும் கனமழையும்
இந்தக் கொரோனாவுக்கும் கனமழைக்கும் கூட பிறந்த தொடர்பு ஏதோ இருக்கும்
என்று நினைக்கிறேன். ரொம்ப நாட்கள் கொரோனா வந்து பள்ளிக்கூடங்கள் மூடிக் கிடந்தன. இப்போது
கனமழை வந்து பள்ளிக்கூடங்கள் மூடிக் கிடக்கின்றன. இந்த இரண்டுக்கும் மரபார்ந்த ஏதோ
ஓர் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். கொரோனா சளி, காய்ச்சல், இருமல் என்று பரப்பிக்
கொண்டிருப்பதைப் போலவே கனமழையும் சளி, காய்ச்சல், இருமல் இவற்றோடு டெங்குவையும் பரப்பிக்
கொண்டிருக்கிறது.
கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் திறந்து ஒரு சில நாட்கள் ஆகிய நிலையில்
கனமழை வந்து ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா என தொலைக்காட்சியைப் பார்க்க
வைக்கிறது.
மழை முகம் காட்டும் ஒவ்வொரு
பள்ளி நாள்களிலும் காலையில் எழுந்ததிலிருந்து எட்டு மணி வரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும்
செய்தித் தொலைக்காட்சி ஓசைதான் கேட்கிறது. இரவில் அரை மணி நேரம் மழை பெய்தாலும் கனமழையால்
பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்களா என்ற ஆசை பிள்ளைகளுக்கும் சமயங்களில் ஆசிரியர்களுக்கும்
வந்து விடுகிறது. பள்ளிகள் விடுமுறை என்ற செய்தி வந்து விட்டால் பிறகு செய்திகளிலிருந்து
தொலைக்காட்சி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மாறி விடுகிறது.
தொலைக்காட்சியில் செய்தி
வந்து விட்டால் பிறகு அது வாட்ஸப்பில் பரவும் வேகம் இருக்கிறதே. அது ஒளியை விட வேகமாகச்
செல்லும் அதிவேகப் பரவல் வேகம் உடையதாக இருக்கிறது. அனுப்பியவருக்கே அந்த செய்தி மீண்டும்
வந்து தான் சேர வேண்டிய அனைவருக்கும் சேர்ந்து விட்ட செய்திகளைச் சொல்லி விடுகிறது.
சமீப ஆண்டுகளாக வடகிழக்குப்
பருவமழை ஒவ்வொரு வருடமும் பயமுறுத்துவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறது. வார்தா, தானே,
கஜா போன்ற புயல்களை உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது.
புறநகர்ப் பகுதிகளை மிதக்க விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர்
மாதங்களில் மனித நடமாட்டத்தை ஒடுக்கி வைத்து விடுகிறது.
ஏற்கனவே கொரோன பரவலால் கற்றல்
தொடர்ச்சி ஒரு பேரிடரைச் சந்தித்தது. இப்போது கனமழையால் மற்றுமொரு பேரிடரைச் சந்திக்கிறது.
பேரிடர் காலங்களில் பேரிடரை எதிர்கொள்வதுதான் முக்கியமானது என்றாலும் கற்றல் தொடர்ச்சி
பாதிக்கப்பட்டு கற்றலில் விழும் இடைவெளியும் ஒரு வகைப் பேரிடர்தான். கற்றல் தொடர்ச்சியில்
தொடர்ந்து உண்டாகும் இடைவெளி அறிவார்ந்த தளத்தில் ஒரு மிகப் பெரிய பேரிடரை உண்டாக்கி
விடக் கூடும்.
*****
No comments:
Post a Comment