28 Oct 2021

சுவை மொட்டுகள் மெல்ல மலர்ந்த பொழுது…

சுவை மொட்டுகள் மெல்ல மலர்ந்த பொழுது…

            எனது பேராசிரியர் அலைபேசியில் என்னை அழைத்திருந்திருக்கிறார். நண்பர்கள் பலரும் அழைத்திருந்திருக்கிறார்கள். நான் பிரக்ஞை இழந்த காய்ச்சலில் கிடந்தேன். பத்து நாட்கள் நீடித்த பிணி சூழ்ந்த வாழ்க்கையில் நான்கைந்து நாள்களாக காய்ச்சல் சூழ்ந்த உலகில் நான் இருந்தேன். காய்ச்சல் கொஞ்சம் தணிந்த பிறகுதான் அலைபேசியில் என்னை யார்யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்பதைத் தவறிய அழைப்புகளை வைத்து அறிந்து கொண்டேன்.

            இந்த நோய்க்கால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்வது உங்களுக்கு ஏதோ சில விதங்களில் உதவியாக இருக்கலாம். எனக்கும் அப்போது நடந்த சம்பவங்களைச் சுருக்கமாகவேனும் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

            இந்த நோய் முதலில் தொண்டை கரகரப்பில் ஆரம்பித்து தொண்டை வலி மற்றும் காய்ச்சலாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அடித்த காய்ச்சல் கொஞ்சம் கூட நிற்கும் அறிகுறியைக் காட்டாமல் போனது போது என் மனைவி மிகவும் பயந்து போனாள். வெளியிலிருந்து யாரும் என்னை அடித்திருந்தால் கூட இவ்வளவு பயந்திருக்க மாட்டாள். கொரோனா அச்சுறுத்தல் தணியாத இந்தக் காலத்தில் தொடர் காய்ச்சல் அவளை விதவிதமான கற்பனைகளில் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அவள் என் உடம்பை அடிக்கடித் தொட்டுப் பார்த்து உடம்பு ரொம்ப சுடுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கோ உடல் குளிர்ந்து கொண்டே போவது போலிருந்தது. குளிர் தாங்க முடியாமல் ஒன்றுக்கு இரண்டு போர்வைகளாய் எடுத்துப் போர்த்திக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்பும் குளிர் தாங்காமல் இன்னும் சில போர்வைகளை எடுத்துப் போர்த்திக் கொண்ட போது அவள் இன்னும் பயந்து போனாள். அதற்கு மேலும் நான் போர்வைகள் கேட்பேனோ என்ற பயமாகக் கூட அது இருந்திருக்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் புலம்ப ஆரம்பித்து விட்டாள். கடும்காய்ச்சலில் இருந்த நான் புலம்ப வேண்டியதற்குப் பதில் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் புலம்பிய புலம்பலில் அதற்காகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விட்டது.

            காய்ச்சலோடு கொஞ்சம் கொஞ்சமாக உடல் வலியும் உண்டாக ஆரம்பித்து விட்டது. உடல் வலியென்றால் தாங்க முடியாத வலி. இருபது முப்பது பேர் சேர்ந்து என்னை அடித்துத் துவம்சம் பண்ணினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வலி உடல் முழுவதும். தொண்டை கரகரப்பும் தொண்டை வலியும் அதன் அடுத்த கட்டத்தை அடையத் தொடங்கியது. தொண்டை கட்டிக் கொண்டது. தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாத நிலை எனக்கு வரும் என்றெல்லாம் நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அப்படி ஒரு நிலை வந்து விட்டது. நான் கைகளை ஆட்டி அசைத்து சைகை மொழியில் பேச ஆரம்பித்திருந்தேன். இதைப் பார்த்து என் மனைவி இன்னும் பயந்துப் போக ஆரம்பித்தாள்.

            சாப்பாட்டைப் பொருத்த வரையில் எப்படிச் சமைத்துப் போட்டாலும் சாப்பிடுகிற ஆள் நான். சாப்பாட்டில் திடம், சுவை, மணம் என்று எதுவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்தது கிடையாது. பசிக்குச் சோறு மட்டும் இருந்தால் கூட போதும். தண்ணீரை ஊற்றிச் சாப்பிட்டு விட்டுப் போய்க் கொண்டு இருப்பேன்.  இப்படிப்பட்ட எனக்குச் சுவையான சாப்பாட்டைக் கூட சாப்பிட முடியாமல் போகும் நிலை வரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் என்னால் கொஞ்சம் கூட சாப்பிட முடியவில்லை. எதை வாயில் வைத்தாலும் ஒமட்டலாக இருந்தது. நாவின் சுவை மொட்டுகள் எல்லாம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பசியை உணரும் நரம்புள் எல்லாம் என்ன ஆனதோ தெரியவில்லை. பசிக்கும் உணர்வு நாடு கடத்தப்பட்டதைப் போல இருந்தது. சில சமயங்களில் மூச்சிரைப்பும் அதிகமாக இருந்தது.

            கிட்டதட்ட என்னுடைய அறிகுறிகள் எல்லாம் கொரோனாவின் அறிகுறியை ஒத்திருந்தன. ஆனால் இந்த அறிகுறிகள் ப்ளூ காய்ச்சலுக்கும் ஒத்து வரக் கூடிய அறிகுறிகளாக இருப்பதையும் காணலாம்.

            என் அம்மா இஞ்சி, மிளகைத் தட்டிப் போட்டுச் செய்யும் கஷாயத்தை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைப் போட்டுக் கொடுத்தார். அதைக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் வரை நோயின் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் என்னை ஒரு நோயுற்ற மனிதராகச் சொல்லி விட முடியாது. சரியாக ஒரு மணி நேரம் முடிந்தால் போதும், மீண்டும் வந்து காய்ச்சல் பீடித்துக் கொள்ளும். உடல் வலி திரும்ப வந்து சேர்ந்து கொள்ளும். மனைவி அவள் பங்குக்கு மூன்று வேளை கபசுர குடிநீரையும் ஆறு வேளைக்கு மேல் திரிகடுக நீரையில் காய்ச்சிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

            நெஞ்சு முழுவதும் சளியாக நிறையத் தொடங்கியது. காய்ச்சல் இவ்வளவு சளியை உருவாக்குமா, அல்லது இவ்வளவு சளி காய்ச்சலை உருவாக்கிக் கொண்டிருக்கிறதா என்பது புரியாத நிலை. இரவு வந்து விட்டால் பூண்டை உரித்து பச்சையாகப் பத்து பற்களுக்கு மேல் சாப்பிட்டிருப்பேன். பூண்டின் காரம் கொஞ்சம் கூட தெரியவில்லை. ஒரு பூண்டு பல்லைச் சாப்பிட்டாலே நெஞ்செல்லாம் எரிய ஆரம்பித்து விடும் நிலையில் எனக்கு எதுவும் தெரியவில்லை. நாவில் பூண்டின் உரைப்பு தெரியாத அளவுக்கு சுவையுணர்ச்சி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

            இதே நிலையை எத்தனை நாட்கள் வைத்துக் கொண்டு தொடர்வது என்ற யோசனைக்குப் பிறகு நான்காவது நாளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர வேண்டியிருந்தது. முதலில் காய்ச்சலைப் போக்குவதில் ஓமியோபதி மருந்துகள்தான் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஓமியோபதி சிகிச்சை துவங்கியது. காலையில் Baptisia Q, மதியம் Antographis Paniculata Q, இரவு Carica Papaya Q என்று கொடுக்க ஆரம்பித்ததில் காய்ச்சல் மட்டுப்படத் தொடங்கியது. அத்துடன் காய்ச்சலுக்கு Gelsemium 200, Influenzinum 200, Bryonia 200, Phyrogenium 200 ஆகிய மருந்துகளும் தண்ணீரில் கலந்து கொடுக்கப்பட்டதில் காய்ச்சல் இரண்டு நாளில் ஒரு முடிவுக்கு வந்தது. உடல் வலிக்கு Rhus Tox 200 என்ற மருந்து நன்றாக வேலை செய்தது. அத்துடன் கூடுதலாக Ars Alb 200 மற்றும் Bellodonna 200 ஆகிய மருந்துகளும் கொடுக்கப்பட்டன. நான் இந்த ஓமியோ மருந்துகளோடு, திரிகடுகம், கபசுர நீர் ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.

            இதைத் தொடர்ந்து வந்த நாட்களில் நான் வறட்டு இருமலால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். இருமி இருமி நெஞ்சு வலி வராத குறைதான். இந்த நாட்களில் யாராவது என்னைப் பார்த்திருந்தால் என்னை ஓர் ஆஸ்துமா நோயாளியாகத்தான் உணர்ந்திருப்பார். எப்படி விடாமல் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தேன் என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரிமாக இருக்கிறது. அப்படியெல்லாம் ஒரு மனிதரால் இருமிக் கொண்டிருக்க முடியாது. இருமி இருமி நெஞ்சு வலியும் நெஞ்சு எரிச்சலும் கண்ட போதும் என்னால் இருமாமல் மட்டும் இருக்க முடியவில்லை. ஓர் இயந்திரம் போல் நெஞ்சு பாட்டுக்கு அதன் போக்குக்கு இருமிக் கொண்டிருந்தது.

            கிட்டதட்ட பத்து நாட்கள் நான் இருமலோடும், உடல் வலியோடும், சாப்பிட முடியாத வாய் கசப்போடும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இயல்பாகச் சுவாசிப்பதோ, சுவையறிந்து சாப்பிடுவதோ இனி என் வாழ்க்கையில் இருக்காதோ என்று நம்பிக்கை இழந்து விட்டேன். வேலைகளை என்னால் இயல்பான சுறுசுறுப்போடு செய்ய முடியவில்லை. மிகவும் மந்த கதியில் செய்து கொண்டிருந்தேன். யாராவது பேசினால் என்ன பேசுகிறார்கள் என்பதை பிரக்ஞைபூர்வமாக அறிந்து கொள்ள முடியாத நிலையிலும் இருந்தேன். வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்ற அவநம்பிக்கை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சூழ ஆரம்பித்தது.

            நிலவு முழுமையாகத் தேய்ந்து அழிந்து விடுவதில்லை என்பதைப் போல நம்பிக்கை முழுமையாக அழிந்து விடுவதில்லை. ஏதோ ஒரு மீட்சி கொஞ்சம் தாமதமாகவேனும் வரத்தானே செய்கிறது.

பத்து நாட்களைக் கடந்து நேற்றைய தினம் நான் சாப்பிட ஆரம்பித்த போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நேற்றுதான் சாப்பாட்டில் எனக்குச் சுவை தெரிய ஆரம்பித்தது. சுவை மொட்டுகள் மெல்ல மலரத் தொடங்கியிருந்தன. பசி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக எழத் தொடங்கியிருந்தது. வாழ்நாளில் சுவையே தெரியாத ஒருவன் முதன் முதலாகச் சுவையை அறிந்தது போல நான் அவ்வளவு குதூகலித்தேன்.

என் உடல் இப்போது வியர்க்க ஆரம்பித்தது. மூச்சை நன்றாக இழுத்து விட முடிந்தது. இரண்டு மூன்று முறை மாடிப்படியில் ஏறி இறங்கிப் பார்த்தேன். கொஞ்சம் திருப்தியாக உணர முடிந்தது. எல்லாம் நன்றாகக் குணமாகியிருப்பது போலத் தெரிய ஆரம்பித்த சமயம் மனைவிக்கு எனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தன. எனக்கு ஏற்பட்டிருந்த இந்த நோய் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் பரவத் தொடங்கியிருந்தது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...