25 Oct 2021

காற்றில் கலந்த கைக்குட்டை

காற்றில் கலந்த கைக்குட்டை

கைகளுக்கு அகப்படாத கைக்குட்டை

காற்றின் கைகளில் அலைந்தோடுகிறது

காற்றில்லா நேரங்களில்

நெற்றியில் வழிந்த வியர்வையை

உறிஞ்சியெடுத்தது அதன் மென்ஸ்பரிசங்கள்

காற்று வந்து வியர்வை துடைத்த பொழுதில்

காற்றின் குழந்தையாகிப் பறந்து செல்கிறது

ஒருவேளை காற்றுக்கு வியர்க்கலாம்

வியர்க்கும் காற்றுக்கு கைக்குட்டை

வியர்வையைத் துடைத்து விடலாம்

காற்று கவர்ந்து சென்றது போன்ற கைக்குட்டையைப்

பின்னாட்களில் கடை கடையாகத் தேடிப் பார்த்தேன்

ஓர் அபூர்வமான கைக்குட்டையைத்தான்

காற்று கவர்ந்து சென்றிருக்கிறது

அன்றிலிருந்து எத்தனையோ கைக்குட்டைகளைக்

காற்றில் தவற விட்டுப் பார்க்கிறேன்

தவற விட்ட பொருட்களை அலையில்

கொண்டு வந்து சேர்க்கும் கடலைப் போல

காற்று கைகளில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது

காற்றுக்குப் பிடித்தது போன்றதோரு கைக்குட்டையை

என்னால் கடைகளில் வாங்க முடியவில்லை

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...