27 Oct 2022

தீபாவளியாம் தீபாவளி

தீபாவளியாம் தீபாவளி

தீபாவளி என்றால்

மகனோ மகளோ வெடி வெடிக்கிறார்

அம்மா படம் பிடிக்கிறார்

அப்பா ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்கிறார்

*****

அண்ணன் வெடி வைக்க தம்பி வீடியோ எடுக்க வேண்டியிருக்கிறது. பிறகு தம்பி வெடி வைக்க அண்ணன் வீடியோ எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வீடியோவை எல்லா குடும்ப வாட்ஸாப் குழுக்களுக்கு அனுப்பித் தொலைய வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் அனுப்பும் வீடியோக்களைப் பார்த்து ஸ்மைலி போட வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் வேலைகள் அதிகமாகி விடுகின்றன. களைத்துப் போனாலும் ஓய்வெடுக்க முடியாமல் வாட்ஸாப்பில் உழன்று கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

வருடத்தில் இப்படி ஒரு நாள் தீபாவளி வருவதால் சமாளிக்க முடிகிறது. தினம் தினம் என்றால் மார்க் ஸக்கர்பெர்க் என்ன செய்வார்? வாட்ஸாப்தான் என்ன செய்யும்? பேஸ்புக் மெட்டா என்று பெயர் மாற்றிக் கொண்டதால் கெத்தாகச் சமாளிக்கத்தான் முடியுமோ?

*****

இந்தத் தீபாவளிக்கு எவ்வளவு வெடி வெடித்தீர்கள் என்றார்கள்.

ஆறு ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கொளுத்தினேன் என்றேன்.

அச்சச்சோ! நீயென்ன மடையனா முட்டாள் பையா? என்றார்கள்.

மூவாயிரத்துக்கு வெடி வாங்கி வெடித்ததை வெறெப்படிச் சொல்லச் சொல்கிறார்கள்?

******

தீபாவளிக்குப் புது சட்டை போட்டீர்களா?

தீபாவளிக்கு புதுப் பலகாரங்கள் சாப்பீட்டிர்களா?

தீபாவளிக்கு புது வெடிகள் வெடித்தீர்களா?

தீபாவளிக்கு புது நகைகள் வாங்கினீர்களா?

தீபாவளிக்கு புது பங்குகள் வாங்கினீர்களா?

இத்துடன்

புதிதாக இதையும் சேர்த்துக் கொள்கிறார்கள்

தீபாவளிக்குப் புதுப்படம் பார்த்தீர்களா?

எங்கே புதுப்படம் பார்ப்பது?

பார்ப்பதெல்லாம் பழைய படங்கள் போலவே இருக்கின்றன.

*****

தீபாவளி வந்து விட்டால் பலகாரங்களைத் தின்று பலாத்காரமாய்ப் போகிறது. தின்னா விட்டால் பலகாரங்கள் வீணாகப் போகின்றன என்ற சத்தத்தைக் கேட்டுக் கலவரமாய்ப் போகிறது.

******

தீபாவளி, பொங்கல் என்றால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போகிறார்கள். மற்ற நாட்களில் அப்படிப் போக மறுக்கிறார்கள்.

இந்தத் தீபாவளியும் பொங்கலும் இல்லையென்றால் சொந்த ஊர் மறந்து போகுமோ? சென்னையும் திருப்பூரும் ஓசுரும் சொந்த் ஊர் என்று ஆகுமோ?

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...