14 Jul 2022

சமநிலையை நோக்கும் காலச் சக்கரம்

சமநிலையை நோக்கும் காலச் சக்கரம்

சமநிலையை நோக்கி நகர்வது இயற்கையின் நியதி. காலம் கடந்தாவது இந்த நியதியை நோக்கிதான் எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

வரலாற்றின் காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் பயணித்துப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமநிலையற்ற வாழ்க்கைப் பாதையைத்தான் பார்க்க முடியும். அன்று காலம் சுழன்று வந்த வாழ்க்கைப் பாதையும் இன்று காலம் சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையும் வேறு வேறானவை.

ஆண், பெண் வேறுபாட்டின் சமத்துவமற்ற நிலையை மாற்றி சமநிலையை நோக்கிய பாதையில் காலச் சக்கரம் சுழல ஆரம்பித்திருக்கிறது. இப்போதுதான் பெண்களுக்கான காலச் சக்கரம் சமநிலையான வாழ்க்கைப் பாதையில் சுழல தொடங்கியிருக்கிறது.

பெண்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி அவர்களைச் சமநிலையான பாதையில் அழைத்துச் செல்கிறது. கல்வியின் மூலம் பெண்கள் அடைந்த வேலை வாய்ப்பு அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்க செய்துள்ளது.

புறவாழ்வின் சமநிலையைப் பொருளாதாரம்தான் தீர்மானிக்கிறது. அகமனதின் சுதந்திரமான சிந்தினைக்கும் பொருளாதாரம்தான் வித்திடுகிறது. பெண்கள் தங்கள் சமநிலைக்கும் சுதந்திரமான சிந்தனைக்கும் காரணமான பொருளாதாரத்தைக் கல்வியின் வடம் பிடித்து வேலைவாய்ப்பு எனும் தேரை இழுத்ததன் மூலமாகப் பெற்றுள்ளார்கள்.

பெரும்பாலனா வேலைவாய்ப்புகள் இன்று ஆண்களை விட பெண்களை நோக்கி நகர்வதையே விரும்புகின்றன. அதற்கு வேலைவாய்ப்பில் பெண்கள் காட்டும் பொறுப்புணர்வும் அக்கறையுணர்வும் முக்கிய காரணங்களாகும்.

வேலைகளை நிர்வகிப்பதிலும் மேலாண்மை செய்வதிலும் ஆண்களை விட பெண்கள் திறம் பெற்றவர்களாக இருப்பதால் வேலைவாய்ப்பின் பெரும்பாலான துறைகளை இன்று பெண்களே கைப்பற்றிக் கொண்டும் இருக்கின்றனர்.

பண்டைய சமூகப் பின்னணியானது பொருளாதாரத்துக்காகப் பெண்கள் ஆண்களைச் சார்ந்ததாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. வேலைக்குச் செல்லும் உரிமையைச் சமூகம் அவ்வளவு எளிதாகப் பெண்களுக்கு வழங்கி விடவில்லை. அதற்காகவே வீட்டு வேலைகளைச் செய்யும் அடிமைகளைப் போலப் பெண்களை சமூகம் மிக நீண்ட காலம் நடத்தி வந்தது.

வீட்டு வேலைச் செய்யும் அடிமைகளாய்ப் பெண்கள் இருக்க வேண்டும் என்பதற்கேற்ப ஒழுக்க நியதிகளையும் சம்பிரதாய சடங்குகளையும் சமூகம் உருவாக்கி வைத்திருந்தது. பெண்கல்வி எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது. கல்வியின் மூலம் கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்பு அவர்களைச் சுதந்திரம் பெற்ற மனிதர்களாக மாற்றியிருக்கிறது.

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்களுக்குச் சுதந்திரம் கிடைத்த ஆண்டே அனைத்து மக்களுக்கும் சமூக சுதந்திரமும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைத்து விடவில்லை. அதற்காக நெடும்போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஓரளவு சமூக சுதந்திரமும் பொருளாதாரச் சுதந்திரமும் சாத்தியமான சூழ்நிலையிலும் பெண்களுக்கான சுதந்திரம் கேள்விக்குறியாகவே இருந்தது. அந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக்கி நிமிர்த்தியது கல்வியும் வேலைவாய்ப்பும்தான்.

இப்போது பெண்கள் சுதந்திரமான முடிவை எடுக்கும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் இல்லாத குடும்பத் தலைமையையும் பெண்கள் தங்களின் தலைமையில் வெற்றிகரமாக நடத்திக் கொண்ருக்கிறார்கள்.

ஆண்கள் இல்லாத குடும்ப அமைப்பில் பெண்கள் வெற்றி பெறுவதைப் போல பெண்கள் இல்லாத குடும்ப அமைப்பில் ஆண்களால் வெற்றி பெற முடியாமல் இருப்பதைக் காண முடிகிறது.

குறிப்பாகக் கணவர் இல்லாத அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் வளர்க்கும் குழந்தைகளையும், பெண்டிர் இல்லாத ஆண்களால் வளர்க்கும் குழந்தைகளையும் கொண்டே பெண்களால் எதையும் தாங்கி எதிர்கொள்ள முடியும் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தியிருக்கிறது.

ஆண்கள் தங்கள் பெண்துணையைத் தேர்ந்தெடுத்த காலம் மாறி பெண்களும் தங்களுக்கான ஆண் துணையைத் துணிவுடன் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையைப் பாதையை நோக்கிக் காலச் சக்கரம் சுழல ஆரம்பித்திருக்கிறது.

இனிவரும் ஆண்டுகள் பெண்களுக்கான காலமாக அமையும். பெண்களை அனுசரித்து அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டபடி ஆண்கள் இணைந்து வாழப் போகும் பாதையை நோக்கிக் காலச்சக்கரம் சுழன்று கொண்டிருப்பதையும் நம் கண் முன்னே காண முடிகிறது.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...