ராட்சசன் வெட்டிப் போட்ட நகம்
பெய்த மழைக்குப் பெய்யாத
பொழுதில்
குடை பிடிக்கத் தொடங்கி விடுகின்றன
காளான்கள்
காளான்களைப் பார்க்கையில்
நகத்தை வெட்டிப் போட்டாயா
என்பாள் அம்மா
ஆச்சரியமாகப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
அற்ப ஆயுளைத் தருவதைப் போல
கோழியொன்று வந்து சீய்த்து
விட்டுப் போகும்
நகரத்தை விசித்திரமாகப் பார்த்துச்
சென்ற
ஒரு நாளில் காளான் உணவு தின்று
முடித்த இரவில்
கனவில் முளைத்த காளான்கள்
நிஜத்தில் பார்த்த காளான்களை
விட பெரிதாக இருந்தன
வானத்தை மறைத்து விடுவதைப்
போல
அம்மா அதைப் பார்த்தால்
ராட்சசன் ஒருவன் நகம் வெட்டிப்
போட்டு விட்டான் என்பாள்
ஆயிரம் கோழிகளுக்கும் கோவர்த்தனகிரி
மலை போல
குடை பிடிக்கும் காளானைத்
தின்ற வயிறு பெரிதாகிக் கொண்டு
போகையில்
சட்டென வரும் விழிப்பில்
கனவிலும் சட்டென முளைத்து
சட்டென அழிந்து விடுகின்றன
காளான்கள்
*****
No comments:
Post a Comment