21 Oct 2021

ஞாபக வெளியின் நினைவுப் புற்கள்

ஞாபக வெளியின் நினைவுப் புற்கள்

யாருமில்லாத இடங்களில்

நினைவு மனிதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்

மனதோடு உரையாடிக் கொண்டோ

வறட்டு விவாதம் செய்து கொண்டோ

சண்டை பிடித்துக் கொண்டோ

தனிமையைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

எப்படி மனதோடு வந்து ஒட்டிக் கொண்டார்கள்

மனதை விட்டு ஏன் நீங்க மறுக்கிறார்கள் என்ற

நியாய தேசத்தின் நேர்மையான கேள்விக்கு

அநியாய வர்க்கத்தின் அதிகார தொனியில்

பதில் சொல்ல மறுத்தபடி திமிறிக் கொண்டு செல்கிறது

மென்மேலும் சீட்டுக்கட்டுகளைப் போல

நினைவுகளைக் கலைத்துப் போடும் மனம்

சிறு பொழுதேனும் யாருமில்லாத

தனிமையை அனுபவிக்க வழியில்லாமல்

ஞாபக வெளியில் நினைவுப் புற்கள்

பிடுங்கி எறிய எறிய முளைத்தெழும் மனதில்

அதுவாக வளரும் புற்கள்

அதுவாக அழிகின்றன அதுவாக முளைக்கின்றன

ஒவ்வொரு புல்லாய் வேடிக்கைப் பார்க்கையில்

ஞாபக மண்டையிலிருந்து நினைவு மயிர்களாய்

நிலத்துக்கும் வேருக்குமான தொடர்பை விட்டொழித்தபடி

உதிர்ந்து கொண்டே இருக்கின்றன புற்கள்

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...