2018 இன்
முடிவில் எல்லாவற்றையும் ஒரு மறுபரிசீலனை செய்வது ஊடக உலகில் வழக்கம் இருப்பதால் நாமும்
அதைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அந்த வகையில்
திரைப்படங்கள்.
2018 இன்
திரைப்படங்கள் பற்றி ஒரு பரிசீலனை செய்து விடலாம்.
2018 இன்
குறிப்பிடத் தகுந்த இரண்டு திரைப்படங்களாக நான் கருதுபவை,
1. பரியேறும்
பெருமாள்,
2. வடசென்னை,
3. மேற்குத்
தொடர்ச்சி மலை
மூன்று படங்களும்
வெளிப்படுத்தியுள்ள அரசியல் பட்டவர்த்தனமானது.
பரியேறும்
பெருமாள் பேசிய சாதிய அரசியல் விவாதங்களை முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது.
சாதிய ஆணவப் படுகொலையை இந்த அளவுக்கு ஆவணப்படுத்திய திரைப்படம் வேறு எதுவுமில்லை எனது
மேலான அபிப்பராயம்.
வடசென்னையில்
வெளிப்பட்ட அரசியல் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் துணிந்து பேசாத ஒன்று. அதை விட அது
காட்டிய சிறைச்சாலை கேங் வார் சத்தியமாக திரைப்படங்களால் பேச முடியாத ஒன்று. இந்த இரண்டு
படங்களுமே பேசாப் பொருளைப் பேசத் துணிந்த தமிழ் திரைப்பட உலகின் பெருமை மிகுந்த அடையாளங்கள்.
மேற்குத்
தொடர்ச்சி மலை திரைப்படம் குறித்த எனது மேலானப் பார்வையை அப்படம் வெளிவந்த போதே வெளிப்படுத்தியிருந்தேன்.
இத்திரைப்படம் பேசிய அரசியல் படு எதார்த்தமானது. துண்டு நிலத்துக்காக துண்டாடப்படும்
விவசாயியின் வேதனையைப் பேசிய விதத்தில் இப்படம் தனித்து நிற்கிறது.
இம்மூன்று
படங்கள் தவிர்த்துப் பார்த்தால் தமிழ்த் திரைப்பட உலகம் இன்னும் நிறைய முன்னேற வேண்டியிருக்கிறது.
பல படங்களில்
வெளிநாட்டுப் படங்களின் அட்ட காப்பி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வெளிநாட்டுக்
காப்பிகளை முறியடித்து உள்நாட்டு கதைக் காப்பிகள் எடுத்தத் திரைப்படங்களும் இருக்கின்றன.
அப்புறம் ஒரு வழியாகப் பஞ்சாயத்து முடிந்து டைட்டில் கார்டில் நன்றி கார்டு போடப்பட்ட
நிகழ்ச்சிகளும் நடந்து ஏறியிருக்கின்றன.
அவைகளையும்
ஒருவாறாக வகைபடுத்தினால்,
நயன்தாராவின்
கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள்.
விஜய் சேதுபதியின்
96 கதைக் காப்பி என்ற விசயத்தில் சிக்கியிருந்தாலும் அதுவும் ஒரு நல்ல பொழுதுபோக்குத்
திரைப்படமே.
2.0., சர்க்கார்
குறித்து அவ்வபோது பேசியிருக்கிறேன்.
ரஜினியின்
காலா பேசிய நில அரசியல் முக்கியமானது. அதன் கிளைமாக்ஸ் ஒருவித நாட்டார் வழிபாடு போல
முடிந்து விட்டது. போராடினால் நாடு சுடுகாடு ஆகி விடும் என்ற ஒரு கமெண்டில் காலாவுக்கு
காலானாக ரஜினியே மாறி விட்டார்.
சவரக்கத்தி
ஒரு வித மேதாவித்தனமான மனிதத் தன்மையைப் பேசியது.
இரும்புத்
திரை அர்ஜூனை வில்லனாக்கியது. அவர் பின் மீ டூ புகாரில் சிக்கினார்.
மணிரத்னத்தின்
செக்கச் சிவந்த வானம் வழக்கமான அவரது டெம்ளேட் படம் என்று சொல்வதைத் தவிர அதில் வேறு
ஒன்றும் இல்லை.
ராட்சசன்
வழக்கமான சைக்கோ திரில்லர். சந்தேகத்தை ஓர் ஆசிரியர் மேல் திருப்பி அப்புறம் ஒரு சைக்கோ
மேல் கொண்டு போய் அவரை ராட்சசனாக ஆக்கி இருந்தனர். இசை மனதை மென்மையாக்கும் என்பார்கள்.
இசையோடு கூடிய ஒரு சைக்கோவைப் படைத்திருந்தார்கள்.
கீர்த்தி
சுரேஷ் நடித்திருந்த நடிகையர் திலகம் சென்டிமென்டான கண்ணீரை வரவழைக்கும் பயோபிக்.
மாடர்னான எமோஸனல் சிவாஜி படம் பார்ப்பது போலிருந்தது.
கடைக்குட்டிச்
சிங்கம், சண்டக்கோழி2, சாமி2 கமர்ஷியர் ஹிட்டுக்காக எடுக்கப்பட்டவைகள்.
அடல்ட் காமெடி
என்ற பெயரில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து விட்டார்கள். இடையே பியார் பிரேமா காதலைக்
கலந்து விட்டார்கள். விமலும் தன் பங்குக்கு இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கிறது என்று
காட்டினார்.
கனா - வருடத்துக்கு
வரும் ஒரு விக்ரமனின் தன்னம்பிக்கை தரும் படத்தைப் போல இந்த வருடத்தில் கடைசியில்
மிஸ் ஆக விடாமல் வெளிவந்தது.
விஸ்வரூபம்2
படத்தைப் பற்றி கமலே பேச விரும்ப மாட்டார்.
மேலும் நிறைய
நல்ல திரைப்படங்களும் வெளிவந்திருக்கக் கூடும். கண்ணால் பார்க்க முடிந்தவைகள் இவைகளே.
சீதக்காதி
நடுவுல கொஞ்சம் விஜய் சேதுபதியைக் காணும் கதை. ஆத்மாவாகவும் நடித்த திருப்தி அவருக்கு
இருக்கும்.
மொத்தத்தில்
ஆவலாக எதிர்பார்ப்பதற்கு மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்குத்
தொடர்ச்சி மலை, வெற்றி மாறனின் வடசென்னை ஆகிய படங்களில்தான் 2018 இன் திரைப்படங்களாக
இருந்தன. இந்த இயக்குநர்களிடமிருந்து வரப் போகும் படங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இதில் வெற்றிமாறன் வடசென்னை 2 வை உறுதிபடுத்தியிருக்கிறார்.
இதே போல
2018 இன் டி.வி. சீரியல்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை. ஆனால் உட்கார்ந்து பார்க்க
முடிந்ததில்லை. பார்ப்போம் வரும் ஆண்டாவது எழுத வேண்டும். அவ்வபோதாவது எழுத வேண்டும்.
சீரியல்களைத் தவிர்த்து இனி தமிழ் வாழ்வியலை எழுத முடியாது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
அபிப்ராய பேதங்கள் இருந்தால் அவசியம் தெரியப்படுத்தவும்.
*****
No comments:
Post a Comment