14 Dec 2017

சம்மன் – சிறுகதை

சம்மன் – சிறுகதை
-         விகடபாரதி
ரெட்டியிடம் பத்தாயிரம் வாங்கி அதை வட்டியும் முதலுமாக அடைத்து விட்டார் மாதவன் கோனார். கோர்ட்டிலிருந்து கோனாருக்குச் சம்மன் வந்திருந்தது. ரெட்டிதான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கோனாருக்குக் கோபம் கோபமாக வந்தது. துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, சம்மனை எடுத்துக் கொண்டு ரெட்டி வீட்டுக்குக் கிளம்பினார்.
"யோவ் ரெட்டி!" என்று வாசலிலிருந்து சத்தம் கொடுத்தார் கோனார். யாரும் வெளியே வரவில்லை. திண்ணையில் ஏறி கதவைத் தட்டி மீண்டும் சத்தமிட்டார்.
"அடடே! யாரு கோனாரா?" என்றார் ரெட்டி.
"ம்!" என்று முடித்துக் கொண்டார் கோனார்.
"என்ன விசயம்?"
"என்னா இது?" கோனார் கையிலிருந்த கோர்ட் சம்மனைக் காட்டினார்.
ரெட்டி வாங்கிப் படித்து விட்டு, "உங்கள வர்ற மாசம் இருபத்து நாலாம் தேதி கோர்ட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க?" என்றார்.
"அதான் எதுக்குங்றேன்!"
"நீரு கடன் வாங்கியிருக்கிரூ! அதை முழுசா கட்டல!"
"நான்தான் எல்லாத்தையும் கட்டிட்டேன்னே ரெட்டி. அப்புறம் கட்டலன்னா? எனக்குப் புரியல!"
"இன்னும் முழுசா கட்டி முடியலியே!"
"இது வரைக்கும் இருபது ஆயிரத்துக்கு மேல கட்டியிருப்பேன். வாங்குன கடன் பத்தாயிரம்தான் பார்த்துக்கோ!"
"கணக்குப்படிப் பார்க்கணும்! இப்படி பொட்ட கணக்குப் போடக் கூடாது!"
"சரி! உன் கணக்குதான் என்ன? சொல்லு!"
"இன்னும் ரெண்டாயிரம் பாக்கி இருக்கு!"
"அதை இப்போ கொடுத்திட்டா எல்லாத்தையும் முடிச்சுக்குவியா?"
"முன்னாடியேன்னா அப்படி முடிச்சிருக்கலாம். இப்போ கோர்ட், கேஸ்னு ஆயிடுச்சு. அதுவும் இல்லாம வழக்குக்கு வேற நான் செலவு செஞ்சிருக்கேன்!"
"எல்லாத்தையும் சேர்த்து எவ்வளவுன்னு சொல்லு. ஒரு மூவாயிரம்னா முடிச்சுக்குவியா?"
ரெட்டி சிரித்தார்.
"நான் என்ன பண்றதுன்னு சொல்லு!" கோனார் கேட்டார்.
"என்ன பண்றதுன்னா? கோர்ட்டுல ஆஜராகு!" என்று சொல்லி விட்டு ரெட்டி மீண்டும் சிரித்தார்.
"வேற வழியில்லையா?"
"ம்ஹூம்" ரெட்டி தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினார்.
"எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல" கோனார் பரிதாபமாகக் கேட்டார்.
"சொன்னா இந்தக் காலத்துல யாரு கேட்குறாங்க? சம்மன்னா இதோ விழுந்தடிச்சு ஓடியாறே! இல்லேன்னா வருவியா?"
"ஊர்ல பெரிய மனுசங்க எல்லாம் இருக்காங்கல்ல. ஒரு வார்த்தை சொன்னா தீர்த்து வைக்க மாட்டாங்களா? நான்தான் என்ன ஊர் வார்த்தைக்குக் கட்டுபடாத ஆளா?"
"அதையெல்லாம் யோசிக்க அப்ப நேரமில்ல. செஞ்சாச்சு. நான் ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்ல. கோர்ட்ல சந்திப்போம்!" ரெட்டி சொல்லி விட்டு அதற்கு மேல் பேச விரும்பாதவராக வீட்டுக்குள் சென்றார். கதவு சடாரென்று சாத்தப்படும் சத்தம் கேட்டது.
கோனாருக்கும் அங்கு நிற்க பிடிக்கவில்லை. விடுவிடுவென்று வீட்டை நோக்கி நடந்தார். சம்மன் தேதியை எடுத்து ஒரு முறை பார்த்தார். "பதினேழாம் தேதி ஆஜராகணும்!" மனசுக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டார். அவருக்கு கைகள் எல்லாம் நடுங்கியது.
"பெருமாளே! எங்கக் குடும்பத்திலேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் கூட யாரும் காலடி வெச்சதில்ல. இப்ப நான் கோர்ட்டுக்கே போற மாதிரி ஆயிடுச்சு. நான் மனசறிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலயே!" கோனார் தனக்குள் புலம்பிக் கொண்டார்.
ஊரில் தனக்கு தெரிந்த நாலைந்து பேரிடம் இது குறித்து விசாரித்தார். ஆளாளுக்கு அவர்கள் பங்கிற்கு மேலும் பயமுறுத்தினார்கள். "எதுக்கும் ஒரு வக்கீலைப் பார்த்து வெச்சுக்கும்! கோர்ட் கேஸ்லேர்ந்து வெளியே வர்றது அவ்வளவு சுலபமில்ல!" என்றார் செல்லமுத்து தேவர்.
கோனாருக்கும் அதுதான் சரியாகப் பட்டது. டவுனுக்குச் சென்று ஒரு வக்கீலைப் பார்த்தார். அவர் ஐயாயிரம் கேட்டதும் கோனாருக்கு ஈரக்குலை நடுங்கியது. "அவ்வளவு சீவனத்துக்கு வழியிருந்தா நான் ஏன் ஆடு, மாடுகளை மேய்ச்சுகிட்டு அல்லல்படுதேன்? கடைசியா அரெஸ்ட் பண்ணி செயில்லதானே போடுவாங்க. இந்த ஆடு, மாடுகளை மேய்ச்சுகிட்டு ஊர்ல கிடக்குறதுக்கு அங்கேயும் கொஞ்ச காலம் இருந்த பார்த்திடறேன்! கொஞ்ச நாளைக்கு வெயில்லயும், மழையில்லயும் கிடந்து அல்லல் படறதாவது குறையட்டும்!" ஒரே மூச்சில் பேசி விட்டு கோனார் வெளியே வந்தார்.
சம்மன் அன்று ஆஜராகப் போன கோனாருக்குக் கோர்ட் வித்தியாசமாக இருந்தது. பெருங்கூட்டமாக இருந்தது. அவரவர் பேர் உச்சரிக்கப்பட்ட போது கூட்டம் கூட்டமாக ஆஜரானார்கள். ஜட்ஜூக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு அவர் தேதியைக் கேட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
மாதவன் கோனார் பெயர் ரெட்டியின் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்பட்ட போது இவர் உள்ளே சென்று நின்றார். அழுக்கேறிய வெட்டியும், தோளில் போட்டிருந்த சிவப்புத் துண்டுமாக அவர் சென்று நின்ற போது அனைவரும் தங்கள் பேச்சை நிறுத்தி விட்டு கோனாரையே வெறிக்கப் பார்த்தனர்.
ஜட்ஜ் தன்னிடம் எதாவது கேட்பார் என்று கோனார் எதிர்பார்த்தார். அத்தோடு எதிர்கட்சி வக்கீல் தன்னிடம் விசாரிப்பார் என்றும் எதிர்பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. ஜட்ஜ் அடுத்த மாதத்தில் ஒரு தேதியைச் சொல்ல, அடுத்த வழக்கிற்கான ஆட்கள் அழைக்கப்பட்டனர்.
கோனாருக்கு சப்பென்று போய் விட்டது. மனதுக்குள் பலவாறாக எப்படி எப்படியெல்லாம் பதில் சொல்லலாம் என்று திட்டமிட்டு அவர் வைத்திருந்தார். சரி அடுத்த தேதித்துக்குப் பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பி வந்தார்.
ஊர் திரும்பிய கோனாரை செல்லமுத்து தேவர் விசாரித்தார். "சாட்சிக் கூண்டுலயும் ஏத்தல. சத்தியப் பிரமாணமும் எடுக்கச் சொல்லல. அடுத்த மாசத்துல ஒரு தேதி கொடுத்திருக்காங்க!" என்றார் கோனார்.
"ஓ! வாய்தா கொடுத்திருக்கானா?" என்றார் தேவர்.
வாய்தா என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டார் கோனார்.
அதன் பின் நான்கைந்து முறை கோர்ட்டுக்குச் சென்று வந்தார் கோனார். உருப்படியாக அவர் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. தேதி மேல் தேதியாக வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
ஆடு, மாடு என்று களத்து மேட்டுல அலைந்து கொண்டிருந்த கோனாருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகம் அப்போதுதான் பிடிபட ஆரம்பித்தது. அவருக்கு இது மிகவும் பிடித்திருந்தது. கோர்ட்டில் நிற்கும் கூட்டம், ஆண்-பெண் என்ற பேதமில்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அவர் செல்லும் போதெல்லாம் ஒரு பெருங்கூட்டம் இருப்பது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"மாசத்துக்கு ஒரு வாய்தா என்ன, நாலு வாய்தா போட்டாலும் வந்துட்டுப் போகலாம்! கூட்டத்தைப் பார்க்குறது மனசுக்கு ஒரு இதமாத்தான் இருக்குது!"  கோனார் தனக்குள் பேசிக் கொண்டார்.
ஏழாவது வாய்தாவுக்கு வந்த போது, ஒரு வக்கீல் கோனாரை அணுகி 200 ரூபாய் தந்தால் அவருக்காக ஆஜராவதாகச் சொன்னதும் கோனாருக்கு அது சரியெனப்பட்டது. 200 ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு அவர் கொடுத்த வக்காலத்து நோட்டீஸ்ல கைநாட்டுப் போட்டுக் கொடுத்தார்.
இப்படி நான்கைந்து விசாரணைகள் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் வக்கீலுக்கு 200 ரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தார் கோனார். அவருக்கு அநாவசியமாக 200 ரூபாய் கொடுக்கிறோம் என்று தோன்றவே அடுத்த முறையிலிருந்து வக்கீலிடம் தனக்காக ஆஜராக வேண்டாம் என்று கறாராகக் கூறி விட்டார்.
பத்து மாதங்கள் கடந்த பிறகு ஒரு நாள் குறுக்கு விசாரணை என்றார்கள். கோனார் நடந்ததை நடந்தபடி கூறினார்.
"உங்க தரப்புக்கு அரசு தரப்பிலேர்ந்து வக்கீலை ஆஜராகச் சொல்லட்டுமா?" என்று ஜட்ஜ் கேட்ட போது, "எங்கிட்ட அவ்வளவு வசதியில்லீங்கய்யா!" என்றார் கோனார்.
"நீங்க பணம் தர வேண்டியதில்ல!" என்றார் ஜட்ஜ்.
"ஆரம்பத்துல இப்படித்தான் சொல்வீங்க. கடைசியில பணம் கேட்பீங்க. எனக்கு சரிபட்டு வராது." என்றார் பிடிவாதாமாக கோனார்.
"நீங்க எதிர்தரப்பை எதாவது குறுக்கு விசாரணை பண்ண விரும்புறீங்களா?" என்றார் ஜட்ஜ்.
"அவங்களுக்குதானே சந்தேகம். எனக்கு ஒண்ணும் சந்தேகம் இல்ல. எதுவா இருந்தாலும் அவங்களேயே கேட்கச் சொல்லுங்க. நான் பதில் சொல்லிக்கிறேன். எனக்குப் பதில் மட்டும்தான் சொல்லத் தெரியும். கேள்வி கேட்கத் தெரியாது" என்றார் கோனார்.
கடைசியாக ரெட்டி இறங்கி வந்தார். வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் ஐயாயிரம் மட்டும் தரும்படி கேட்டார்.
"எங்கிட்ட பணம் இல்ல. ஐயாயிரம் இருந்தா வக்கீலை வெச்சு ஒண்ணைய ரெண்டுல ஒண்ணு பார்த்திருக்க மாட்டேனா? நான் ஜெயிலுக்குப் போகவும் தயாரா இருக்கேன். ஆனா சும்மா போக மாட்டேன், போறப்ப உன்னைய கொன்னுட்டுதான் போவேன்!" என்றார் கோனார்.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ரெட்டியோ, ரெட்டி தரப்போ வக்கீலோ ஆஜராகாத காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யும் நிலைமைக்கு வந்தது.
"உங்க மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று ஜட்ஜ் அறிவித்த அந்த நாளில் கோனாருக்கு அது புரியவில்லை. அவர் ஜட்ஜிடம் ஒரு கேள்விதான் கேட்டார், "இனிமே நான் உங்களைப் பார்க்க வரக் கூடாதா?"
ஜட்ஜூக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கோர்ட்டில் இருந்தவர்கள் கோனாரையே ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
*****

-         விகடபாரதி

2 comments:

  1. அருமையான கதை ஐயா! ரசித்தேன். கதையின் நாயகனான வெள்ளந்தி கோனாருக்கும் கதை சொன்ன தங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாசித்து நேசித்து தோள் கொடுத்து இதயத்தைப் பறி கொடுக்கும் ஐயாவுக்கு நன்றிகள்!

    ReplyDelete

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...