7 Jan 2017

பெங்களூருவில் இப்படிச் சிந்திக்கிறாங்க!


பெங்களூருவில் இப்படிச் சிந்திக்கிறாங்க!
            நள்ளிரவில் நகைகள் பூட்டி செல்லும் நங்கை, பாதுகாப்பாக வீடு திரும்பும் நாளே இந்தியாவுக்கு சுதந்திர நாள் என்றார் மகாத்மா.
            இருள் கவியத் தொடங்கும் பொழுதில் சாதாரணமாகச் சென்று வருவதே பெண்களுக்குக் கேள்விக் குறியாக மாறி வருகிறது இந்தியாவில்.
            பல இடங்களில் பெண்களைக் கற்பழித்துப் பார்த்தவர்கள் ஓடும் பேருந்தில் கற்பழித்துப் பார்த்தார்கள்.
            பலவிதமாகக் கொள்ளையடித்துப் பார்த்தவர்கள் பெண்களின் கழுத்துச் செயினை அறுக்கும் விதமாக நுட்பமாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
            பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாட்டில், பெண்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டுதான் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
            அரைகுறை ஆடைகளில் அலைவதால்தான் பெண்கள் மேல் வன்முறை நிகழ்கிறது என்று சொல்பவர்கள், ஜாக்கி ஜட்டி வெளியே தெரிய பேண்ட் போட்டு அலையும் ஆண்களையும், பட்டாப்பட்டி டிராயர் தெரிய வேட்டியைத் தூக்கிக் கட்டித் திரியும் ஆண்களையும், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், நெஞ்சு புடைக்க பனியன் போட்டு அலையும் ஆண்களையும் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள்.
            குழந்தைகளில் ஆண் குழந்தைகள் அம்மணமாகத் திரியலாம், பெண் குழந்தைகள் ஜட்டியாவது போட்டுத்தான் திரிய வேண்டும் என்பார்கள். கேட்டால் இதெல்லாம் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பார்கள்.
            அப்படி என்ன பாதுகாப்பைக் கொடுத்து விட்டது உங்கள் கலாச்சாரக் காவல் குறித்த சூத்திரங்கள்?
            நட்ட நடு வீதியில்...
            சென்று கொண்டிருக்கும் பெண்ணை...
            இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள்
            பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறார்கள்
            இப்படி எங்கு சிந்திக்கிறார்கள் என்றால், இந்தியாவின் ‍ஐ.டி. தலைநகரம் என்று சொல்லப்படுகின்ற பெங்களூருவில்.
            அந்தப் பெண்ணின் ஆடை கண்ணியமாகத்தான் இருக்கிறது
            அந்தப் பெண் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் என்பது போல பொறுமையாக அவர்களின் அடிகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்
            இவைகளெல்லாம் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகிறது.
            இப்படிப் பதிவான சம்பவங்கள் குறைவு. பதிவாகாத சம்பவங்கள் நிறைய.
            சமூகத்தில் ஆண்களுக்கான கல்வி என்ற ஒன்று தனித்து இருக்கிறது. அது என்னவென்றால் ஆண்கள் என்றால் பெண்களை எப்படி வேண்டுமானாலும் போட்டு அடிக்கலாம், பொட்டச்சி என்று சொல்லியே அடிமைபடுத்தலாம். இந்தச் சமூகத்தில் பிறந்த ஆண் முதலில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறானோ இல்லையோ, அதை முதலில் கற்றுக் கொள்கிறான்.
            அதனால்தான் இந்தியாவில் படித்தவனும் பெண்களை அடிக்கிறான், படிக்காதவனும் பெண்களை அடிக்கிறான்.
            இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்களை அடிக்கக் கூடாது என்ற பாடத்தைத்தான் முதலில் படிக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...