ருசியின் பரிணாமம்
பசிக்கு முன்பிருந்த உடல்
நன்றியுணர்வை கழுத்தில் மாட்டிக்
கொண்டு அலைந்தது
பசியடங்கிய உடலுக்கு இப்போது
ருசிக்கத் தொடங்குகிறது
பசியால் அலறும் ஆடொன்றின்
வேதனையை மறுதலித்து விட்டு
கறியின் சுவையைக் கற்பனை
செய்து பார்க்கிறது
கரையில் விழுந்து உயிருக்குப்
போராடும்
மீனின் சுவை நாக்கில் எச்சில்
ஊற வைக்கிறது
கடைசியாக விட்ட முட்டையைப்
பாதுகாக்கப் போராடும்
கோழியின் அடை காத்தலை ஆம்ப்ளேட்
கண்களோடு காண்கிறது
தப்பியோடும் மானுக்கு அடைக்கலம்
தருவதாகச் சொல்லி
கறி வெட்டும் கடை முன் கட்டி
வைக்கிறது
பசித்த வரை இருந்ததாகச் சொல்லப்பட்ட
மனிதம்
ருசிக்க தொடங்கும் போது அழியத்
தொடங்குவதாகக் கூறப்படுகிறது
பழியைச் சுமக்க உபாயத்தைக்
கண்டறியும் ருசி
தெய்வத்துக்குப் படையலிட்டு
உண்ணத் தொடங்குகிறது
மனித ருசிக்கு முன் அடி பணியும்
மிருக வெறி
நாவின் சுவை மொட்டுகளில்
மறைந்து கொள்கிறது
ரசித்து உண்ணும் ருசியின்
பரிணாமத்தில்
மனிதரை ருசிக்க சீவனேதும்
பிறந்து விடக் கூடாது என்ற
பிரார்த்தனை முழக்கங்களோடு
மணியோசைக் கேட்க தொடங்குகிறது
*****
No comments:
Post a Comment