கால வெளியில் கலந்தழிபவை
நிராசைகளைச் சுமந்து
வெறுத்துப் போயிருக்கிறது
மனம்
அனுபவிக்க ஏங்கும் இன்பங்கள்
இன்னும் உடலுக்கு மீதமிருக்கிறது
வெட்டென மறந்து விடச் சொல்லி
கிட்டாப் பொருள்கள் கேலி
பேசுகின்றன
வாழ்க்கை குறித்த ஒரு முடிவுக்கு
வர முடியாமல்
குழம்பிப் போகிறது அறிவு
இருப்பு கேள்விக் குறியாகும்
பொழுதில்
இருப்பதில் நிறைவு கொள்ள
சொல்லும்
போதனை விலாசம் தேடி வந்தடைகிறது
யாரும் ஏமாற்றாமல் ஏமாற்றங்கள்
நிறைந்திருக்கும்
பொழுதுகள் நினைவில் எரிகின்றன
ஒவ்வொரு முறை கையேந்திய போதும்
தட்டி விடப்பட்ட கைகளால்
என்னை நானே அறைந்து கொள்கிறேன்
ஆசுவாச மூச்சுகள் கொப்புளிக்கும்
போது
அமைதிப்படுத்தும் மாத்திரைகள்
செயலிழந்து விடுகின்றன
மண்ணில் கிடப்பது அதுவாக
மக்கிப் போவதைப் போல
வேறு வழியின்றி நிகழ்பவை
எல்லாம்
அதுவாகக் கால வெளியில் அழிந்தொழிந்து
போகின்றன
*****
No comments:
Post a Comment