19 Oct 2021

2021 ஆம் ஆண்டில் ஒரு குறுவை அறுவடை

2021 ஆம் ஆண்டில் ஒரு குறுவை அறுவடை

            அப்பா வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மழை வருவதைப் போலப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. அறுவடை இயந்திரம் வயலில் இறங்கி அறுக்க ஆரம்பித்திருந்தது. காலையில் வருவதாகச் சொன்ன அறுவடை இயந்திரம் மதியத்துக்கு மேல்தான் வந்தது.

            அந்திக் கருக்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சத்தில் ஒரு வாறாக நிலைமையைச் சமாளித்து விடலாம். இருட்டில் மழை வந்தால் எப்படிச் சமாளிப்பது என்ற கவலை அப்பாவின் மனதைப் பீடித்தது. அவர் என்னை படுதாவை எடுத்து வா, டீயை வாங்கிக் கொண்டு வா என வயலுக்கும் வீட்டுக்கும் அலைய விட்டுக் கொண்டிருந்தார். அதிலும் திருப்திப்படாமல் வாடகைக்கு இன்னும் இரண்டு படுதா எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நான் இரண்டு படுதாவோடு வந்து நின்றேன்.

            மதியம் வரைக் காத்திருந்ததில் பாட்டிலில் இருந்த குடி தண்ணீர் சுத்தமாகக் காலியாகி இருந்தது. மதியப் பசிக்கு இரண்டு பரோட்டாவைச் சாப்பிட்டது இரவு எட்டு மணியைக் கடந்த போது அகோரப் பசியைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.

            கடையில் இட்டில் கிடைத்தால் முப்பது இட்டிலி கட்டிக் கொண்டு வா, அப்படியே குடி தண்ணீரும் பிடித்துக் கொண்டு வா என்றார் அப்பா. எந்தக் கடையிலும் இரவு எட்டு மணிக்கு மேல் இட்டிலி இருப்பில்லை. எல்லாம் வியாபாரம் ஆகியிருந்தது. இந்தத் தகவலைச் சொன்னதும் வீட்டிலிருந்து இட்டிலி சுட்டுக் கொண்டு வர முடியுமா என்று பார் என்றார் அப்பா.

            பிறகு வீட்டில்தான் இட்டிலி தயாரானது. இட்டிலியோடும் குடிதண்ணீரோடும் போய் நின்ற போது வானத்தின் கருக்கல் அதிகமாக இருந்தது. ஒரு நட்சத்திரத்தையும் கண்ணில் காண வில்லை. இலேசான தூற்றல் போடத் துவங்கியிருந்தது. அறுத்த நெல்லைக் கொட்ட வந்த அறுவடை எந்திரம் கொட்ட முடியாமல் அப்படியே நின்ற போதுதான் வண்டியில் டீசல் இல்லை என்பது புரிந்தது.

            நிலைமை இப்படி இருக்கையில் கூட குறைச்சல் டீசலை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாதா என விசனப்பட்டுக் கொண்டார் அப்பா. அரை மணி நேரத்தில் டீசல் வந்து விடும் என்றும் அறுவடையை உடனடியாகத் துவங்கி விடலாம் என்றும் அறுவடை இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

            அந்த அரை மணி நேரத்தில் ஒரு பாட்டம் அடித்தால் போதும், அறுவடையை நிறுத்த வேண்டிய சூழல் உண்டாகி விடும் என்ற விசனம் அப்பாவை வாட்டத் தொடங்கியது.

            அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகக் கடந்த போது டீசல் வந்து சேர்ந்தது. அதற்குள் தாகம் மற்றும் பசிக்கான மனநிலையைச் சுத்தமாக அப்பா இழந்திருந்தார். சன்னமாய்த் தூத்தல் போடத் துவங்கியது வானம். டீசலை நிரப்பிக் கொண்டு எந்திரம் சீறிப் பாய தயாராக ஆனது. ஒன்றரை மணி நேர அறுவடைக்குப் பின் அறுவடை முடிவுக்கு வந்தது. அதற்குப் பின் தண்ணீரை எடுத்துக் கடகடவெனக் குடித்தார் அப்பா. ஒரு படுதாவை விரித்துப் போட்டு எல்லாரையும் உட்கார வைத்து இலையை வைத்து இட்டிலிகளைப் பரிமாறத் தொடங்கினார். சரியாக மணி அப்போது பத்தரையைக் கடந்திருந்தது. வானமும் மேகம் கலைந்து தெளிவாக இருப்பது போலத் தோன்றியது. அப்பா வானத்தை நோக்கி ஒரு கும்பிடு போட்டார்.

            எல்லாம் முடிந்த பிற்பாடு பேச்சுத் தொடங்கியது. பனிரெண்டு மணி வரை அந்தப் பேச்சு நீண்டு கொண்டு போனது. சரி கிளம்புவோம் என்று ஒவ்வொரு சொன்னாலும் மழை வராமல் அறுவடையை முடித்ததை ஓர் அதிசயம் போல பேசிக் கொண்டே நின்றனர்.

            இனிமேல் என்ன இங்கேயே கூட படுத்துக் கொள்ளலாம் என்றார் அப்பா. முதலில் நீங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள் காலையில் பார்த்துக் கொள்வோம் என்று அப்பாவைக் கிளப்பிக் கொண்டு வீட்டில் படுக்கையில் இரவு மணி இரண்டைக் கடந்திருந்தது.

            “வானம் ரொம்ப அனுகூலம் செய்த விட்டதடா மகனே!” என்று அப்பா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இதையே நான்கு முறைக்கு மேல் சொன்ன போது எனக்குத் தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது. நான் தூங்கிய பிற்பாடும் அவர் இதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

            காலையில் நான் எழுந்த போது மணி காலை எட்டு மணி இருக்கும். பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைக் காணவில்லை. அப்பா எங்கே என்றேன். அவர் காலையில் ஆறு மணிக்கே களத்துக்குச் சென்று விட்டதாக வீட்டில் சொன்னார்கள்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...